நடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா?

 

நடிகர் விஜய், அரசியலில் குதிப்பாரா?

நடிகர்கள் ரஜினி, கமலஹாசன் ஆகியோர் அரசியலில் குதிப்பது நிச்சயமாகி விட்ட நிலையில், நடிகர் விஜய்யும், அரசியலில் குதிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

DG2b5HYUAAAcayi

கலைத்துறையில் இருந்து அரசியலில் குதித்து, தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்த முதல் நபர், அண்ணா. அதன் பின் முதல்வர் பொறுப்பை அலங்கரித்தவர், கருணாநிதி. இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். இவரது வழியில் வந்தவர், ஜெயலலிதா. இப்படியாக தமிழக கலைத்துறைக்கும், அரசியலுக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது, ஜெயலலிதா மறைந்த பின், பன்னீர் செல்வம், அதன் பின் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதல்வராக, தற்போது எடப்பாடி நீடித்து வருகிறார்.

இந்த சூழலில், தமிழக அரசியலில் “ஜெயலலிதா”என்ற வெற்றிடம் உருவாகியுள்ளது. இந்த வெற்றிடத்தை கைப்பற்ற நடிகர்கள் ரஜினிகாந்த், கமல ஹாசன் ஆகியோர் அரசியல் களத்தில் குதிக்க தயாராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், “இளைய தளபதி” என்று செல்லமாக தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய்யும், தமிழக அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவர் நடிக்கும் படங்களில், அரசியல் வசனங்கள் இடம் பெற்று வருகின்றன.. இப்போது சமீபத்தில் வெளியான விஜய்யின் படமான “மெர்சல்”லிலும், அரசியல் வசனங்களுக்கு பஞ்சமில்லை. இந்த நிலையில் அவர் புதிதாக கட்சி அறிவிக்கலாம் என்று பெரிதும் அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் இப்போதும் கூட, விஜய் தனது தந்தையான எஸ்.ஏ. சந்திர சேகருடன் இது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் என்னவாக இருக்கும்? கொடி எப்படி இருக்கும்? கொள்கை–கோட்பாடுகள் என்னவாக இருக்கும்? என்பது போன்ற கேள்விகள், விஜய் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
விஜய்யும் அரசியலில் குதித்தால், தமிழக தேர்தல் களத்தில் ரஜினி, கமல், விஜய் என்ற மூன்று நடிகர்களை பிரச்சாரத்தில் பார்க்க முடியும். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மனதில் நிலையாக நிற்கப்போவது சூப்பர் ஸ்டாரா? உலக நாயகனா?

இளைய தளபதியா? என்ற கேள்வி எழுகிறது…!!!

நடிகர் விஜய்க்கு ராகுல்காந்தி ஆதரவு

“மெர்சல்” சினிமா படத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். “தமிழன் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்” என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள “மெர்சல்” சினிமாப்படம், தீபாவளிக்கு வெளியானது. இதில் மத்திய அரசு அமல் படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. வரி., மற்றும் டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட சில அரசு சார்ந்த பிரச்சினைகள் பற்றி “பஞ்ச்” வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இது குறித்து தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கருத்து தெரிவிக்கையில், “மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசை விமர்சிக்க எங்கிருந்து தைரியம் வந்தது?” என கேள்வி எழுப்பினார். “உடனடியாக படத்தில் இருந்து மத்திய அரசை தவறாக விமர்சிக்கவும் காட்சிகளை நீக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். மேலும், பிரதமர் மோடியின் நல்ல திட்டங்களை எல்லாம் சொல்லாமல், தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவே கருத்துகளை பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார். “இன்னும் 3 நாட்களில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கா விட்டால், பாஜக சார்பில் போரட்டம் நடத்தப் படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சில காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணாவிடம் மெர்சல் தயாரிப்பாளர் முரளி உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, “மெர்சல்” படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் கருத்தில், ”திரைப்படம் என்பதை, கலாச்சாரம் மற்றும் கலையை வெளிப்படுத்துவதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் கலாச்சாரத்தையும், மற்றும் தமிழ் மொழியையும் பிரதமர் நரேந்திர மோடி சீண்ட வேண்டாம். மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழனின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், “காங்கிரஸ் ஆட்சி துணையோடு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள், ராகுல்? என தமிழிசை எதிர்கேள்வி கேட்டுள்ளார்…!!!.

 
 
 
 

This post has been viewed 721 times