கலாச்சார சிதைவில் சிக்கி விடாதே…!!!

 

கலாச்சார சிதைவில் சிக்கி விடாதே…!!!

இந்தவார “இனியவளே உனக்காக” பகுதியில், “கலாச்சார சிதைவில் சிக்கி விடாதே” என்ற தலைப்பில் சில கருத்துக்களை நாம் பார்க்க இருக்கிறோம். ஏனென்றால், முற்கால கலாச்சாரம், இன்று முற்றிலுமாக மாறி விட்டது. அன்று பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு சில துறைகளைத் தவிர, வேறு எதிலும் பெண்கள் தலையிடுவது என்பது அரிதாக இருந்தது. ஆனால், இன்று பெண்களின் காலடி படாத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் இன்று தொழில் நிமித்தம் உலகம் முழுதும் தனியாக பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக இருப்பினும், அதனை உடைத்தெறிந்து விட்டு, முன்னேற்றப் பாதையை எட்டிப்பிடிக்கத் தயங்காத தங்கத் தாரகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

h1 copy

ஆனாலும் பெண்கள், ஆண்களைப் போன்று நினைத்த நேரத்தில் கிடைத்த இடங்களில் தங்குவதும், வாகனங்களில் லிஃப்ட் கேட்டோ பயணம் செய்ய முடியாது என்பதால், முன்னேற்பாடுகளுடன் பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது. தங்குவதற்கு வசதியானது என்பதைக்காட்டிலும், “பாதுகாப்பானது” என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. காந்தி மகான் சொன்ன அந்தப் பொன்னான காலம் இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டியதுள்ளது.

1975–85-ஆம் ஆண்டு காலகட்டங்களில் பெண்கள் பெரும்பாலும், பெண்களுக்கான தனிக்கல்லூரி, தனிப்பேருந்து என்று இருந்த குறுகிய வட்டத்திலிருந்து, இன்று பாலின வேறுபாடின்றி இரு பாலரும் சேர்ந்தே கல்வி, பயணம் என பயணிக்க வேண்டியதுள்ளது. ஆனாலும் ஒரு சிறு கவனக் குறைவால் பெரும் கொடுமைகளும் நடக்கத்தான் செய்கின்றன. நம் தலைநகர் டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி, சில நாட்களுக்குப் பின் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவை மறக்கவும் முடியுமா?

இது போன்ற வன்சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களில் இன்னும் பல வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, பெண்களுக்கான தனிப்பட்ட போக்குவரத்து வாகனங்கள் இருப்பதும் நல்லது என்பது நிதர்சனம். மேற்கு வங்காளத்தில் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் சிறப்பு ரயிலில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றத்தை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தியும் இதற்கு ஆதாரமாக உள்ளது. அங்குள்ள பரசட் மற்றும் செலடா பகுதிக்கு இடையில் “மாத்ரிபூமி” என்ற பெண்களுக்கான சிறப்பு ரெயிலில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது அந்த ரெயிலின் முதல் 3 பெட்டிகளில் ஆண், பெண் இரு பாலாரும் செல்லலாம் என வெளியான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனக்கோரி, பெண் பயணிகள் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்களை போலீசார் விரட்டியடிக்க முயன்றனர். என்றாலும், இந்த போராட்டம் வெற்றி பெற்றதால், மாத்ரிபூமி பெண்கள் சிறப்பு ரயிலின் அனைத்து பெட்டிகளும் பெண்களுக்கே ஒதுக்கப் படுவதாக ரெயில்வே அதிகாரிகள் அறிவித்தனர். தங்கள் பாதுகாப்பு குறித்து தெளிவான கருத்து கொண்ட பெண்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பத்தாண்டுக்கு முன்னர் கூட ஒளிப்படங்கள் திருமணம், பிறந்த நாள் விழா, திருவிழா அல்லது குடும்ப விழா என ஏதாவது ஒரு விழாவை முன்னிட்டுதான் பெரும்பாலும் எடுப்பார்கள். அதையும் ஆல்பமாகவோ அல்லது சுவற்றில் தொங்கும் வகையிலோதான் வெளியிடுவார்கள். நெருங்கிய உறவுகள், நட்புகள் வட்டாரத்தில் மட்டுமே காணப்பெறும். ஆனால் இப்போது சமூக வலை தளங்களில் தாங்களே வெளியிட்டுக்கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளது. இதனால் புதிது புதிதாக பல பிரச்சனைகளும் உருவாகத்தான் செய்கின்றன.

பிரபல எழுத்தாளர், சமூக சேவகி, அரசு ஊழியர், நாடகக் கலைஞர் என்ற பன்முகத் திறன் கொண்ட துணிச்சலான பெண்மணி ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். அவர் தமது அனுபவங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது இன்றைய நவீன உலகம் மற்றும் நம் நாட்டு, குறிப்பாக நம் தமிழகப் பெண்கள் நிலை குறித்த விவாதம் வந்தது. அப்போது அவர் சொன்ன சில தகவல்கள் ஆச்சரியமேற்படுத்தியது. எந்த காலத்திலும், மன விகாரங்களும், தவறான உறவுகளும் இருக்கத்தான் செய்திருக்கின்றன. அன்று இலை மறை காய் மறைவாகத் தவறுகள் காக்கப்பட்டன. இன்று “கலாச்சார சிதைவு” ஏற்பட்டு, அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

இதே அம்மையார், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றியும் குறிப்பிட்டார். இன்றைய காலத்து கலாச்சார சிதைவில் சிக்கி, மது, மற்றும் பிற ஆடவர் தொடர்பு போன்ற தவறான பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்கு அடிமையான ஒரு குடும்பத் தலைவியினால் அழிந்து போன மகளின் வாழ்க்கை மற்றும் குடும்ப சூழ்நிலை பற்றி என்னுடன் பேசினார். இறுதியில் மொத்த ஊராரும், அந்த பெண் மீது குற்றம் சாட்டவும், செய்த தவறும், மகளின் துர்பாக்கிய நிலையும் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியதால், அத்தாய் மூளை கலங்கிய நிலைக்குச் சென்று விட்டாள். இதற்கு, “கலாச்சார சிதைவு”தான் காரணம்.
எனவே, பெண்களே…! தற்போதைய நவீன கலாச்சார சிதைவில் சிக்கிக் கொள்ளாதீர்கள். இதில் பெண்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதில் பொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே, நமது சீர்மிகு பாரம்பரியக் கலாச்சாரத்தை நாம் காக்க முடியும்., சாதிக்க முடியும் பெண்ணே…!!!.

 
 
 
 

This post has been viewed 165 times