ஓமக்குட்டி

 

ஓமக்குட்டி

9. சொர்ணத்துக்கு ஜூரம்…..!!!

(பனை தொழில் செய்து வரும் தங்கபாண்டி, தனது வேலைகளை முடித்து விட்டு, கிராமத்திலுள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஊருக்குள் குதிரைகளில் வந்த தீவட்டி கொள்ளையர்கள் தங்க பாண்டியை தாக்கி விட்டு, அவரது மனைவி அழகம்மையின் நகைகளை கொள்ளையடித்தனர். அப்போது அவள் ஓமக்குட்டி… ஒமக்குட்டி… என்று தனது பேரனை நினைத்து அலறினாள். பின்னர் சிலம்ப வீரரான ஓமக்குட்டி, தனது தாத்தாவுடன் அவருக்கு உதவியாக சென்றான். இந்த நிலையில், பண்ணையாரின் மகள் சொர்ணம், தன் காதலை ஓமக்குட்டியிடம் வெளிப்படுத்தினாள். இனி தொடர்ந்து படியுங்கள்…)

அம்மன் கோவில் கொடை விழா நெருங்கிவிட்டது. இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் கிராமமே உற்சாகத்தோடுக் காணப்பட்டது.

பண்ணையார் புதிதாகச் சிலம்பாட்டப் போட்டி நடத்த இருப்பதால் சிலம்பாட்ட போட்டியை பற்றியே ஆங்காங்கேப் பெரியவர்கள் பேசி கொண்டனர்.

ஓமக்குட்டி தன் சிலம்பாட்ட குழுவினரைத் தயார் படுத்தியிருந்தான். ஓமக்குட்டியின் கவனம் முழுவதும் போட்டியில் இருந்தது. ஆனால் அன்று சொர்ணா தன்னை தனியாக வரவழைத்து, அவள் மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டதில் அடிமனம் சந்தோஷிப்பதுப் போல இருந்தாலும், அவனுள் அதிகமாக வேதனையும் படர்ந்தது.

சொர்ணத்திடமிருந்து தன்னைத் தன் உணர்வுகளை விலக்கி வைத்துக் கொள்வதை நிதர்சனமாக எண்ணினான். ஆனால் அவன் சிந்தையில் போட்டிக் குறித்தும், அம்மன் கோவில் கொடைக்குத் தேவையான சில பொருள்களை வெளியூரில் சென்று வாங்கவும், பண்ணையார் அவனிடம் சொல்லியிருந்ததில், அவன் கவனம் போனதில் இதை மறந்து போனான்.

சொர்ணா கொல்லைப்புறத்தில் நின்று வெளியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஓமக்குட்டியிடம் தன் காதலைச் சொன்னபோது பதில் சொல்லாமல் சென்று விட்டது, அவள் மனதில் திரும்ப திரும்ப வந்தது.
தனக்குள் எழுந்த ஆற்றாமை பீறிட்டு எழ தனியறையில் போய் அழுதுத் தீர்த்தாள். அவள் மனசு போலவே, உடலும் சோர்ந்துப் போனது. யாரிடமும் அதிகம் பேசவில்லை. ஏதோ சிந்தனைக்கு ஆள்பட்டவளாக, மௌனமாக இருந்தாள். சாப்பிட பிடிக்கவில்லை, அதை தவிர்த்தாள்.

தன் மன உணர்வை வெட்கம் விட்டு அவனிடம் பகிர்ந்துக் கொண்டப் போது அதை ஏற்காமல் சென்று விட்டக் காட்சி மீண்டும் மீண்டும் அவள் மனக் கண்ணில் வந்து ரணப் படுத்தியது.

சொர்ணம் எதிர்பார்க்கவில்லை., தான் தன் காதலை சொன்னதும் அவன் அதை ஏற்றுக்கொள்வான். ஓடிச் சென்று, அவன் பரந்த மார்பில் முகம் புதைத்து ஆனந்தத்தில் அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் அவள் நினைத்த நினைவுகள் கானல் நீராகக் காட்சியளித்து மறைந்து விட்டது. இதயம் வலித்தது.

மரித்து விடலாம் என நினைத்தாள். அவள் தோழி மங்களம் ,அவளோடு விலகாமலேக் கூடவே இருந்தாள். அவளுக்கு ஆறுதலாகப் பேசினாள். அவள் மனதை மாற்ற முயற்சித்தாள்., முடியவில்லை.

அம்மன் கொடை முதல் நாள் துவங்கியது. பண்ணையார் மேற்பார்வையில் சுறுசுறுப்பாக இயங்கினர், ஊர்மக்கள். மேளக்காரர்கள் வந்துவிட்டனர்.

கோவிலுக்கு தேவையான பொருள்களை மாட்டுவண்டியில் கொண்டு இறக்கிவிட்டு, பண்ணையாரைக் காண ஓமக்குட்டி வந்தான்.

பண்ணையார் முற்றத்தில் நின்றிருந்தார். “ஓமக்குட்டி! பூமாலய முத்தரசுக் கொண்டு வந்துட்டானா…?”

“ஆமாய்யா”

“பழக்கொல இறக்கியாச்சா…”

“இப்பதான் இறக்கிக் கோவிலுல வச்சிட்டு வாரன்யா…”

“செரி… நாள அதிகாலையில திருவனந்தபுரத்துலயிருந்து சிலம்பாட்டக் குழுவினர் வந்துடுவாங்க…

அவங்களத் துரைசாமிக்கிட்ட கவனிச்சிக்கச் சொல்லிட்டேன்.

நீ உன் குழுவினரைத் தயாரா வச்சிக்கோ…எல்லாம் செரப்பா முடிச்சிடனும்ம்… செரியா?
“செரிய்யா…”

“கோவிலுக்கு எது தேவன்னாலும் பூசாரிக்கிட்ட கேக்க சொல்லு… உன் ஆசான நான் வரச் சொன்னேன்னுச் சொல்லிட்டு போ…”

“செரிய்யா…” பணிவாகச் சொன்னவன் கிளம்பி விட்டான்.

வீட்டுக்குள்ளிருந்து போகும் அவனைக் கவனித்துக் கொண்டிருந்த சொர்ணத்துக்கு, இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. உடம்பு பலமற்று போனது. போன்ற உணர்வு நிற்கக் கூட முடியாமல் கட்டிலில் வந்து படுத்தாள்.

உடம்பு நடுங்கியது. துணிக் கொண்டுப் போர்த்தி விட்டுப் படுத்துவிட்டாள்.

தோப்பிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த நாடாச்சியம்மாள் படுத்திருந்த மகளருகே வந்தாள்.

“வௌக்கு வெக்கும் நேரத்துல ஒரு நாளும், இப்டி படுக்க மாட்டாளே… சொர்ணம், மக்கா…

மக்களே…”சுருண்டுப் படுத்திருந்த மகளைத் தொட்டெழுப்பியவள் துணுக்குற்றாள்.

“அடக்கடவுளே… ஒடம்பு அனலா…கொதிக்குதே…” வாய் விட்டுச் சொன்னவள் அழகம்மையை அழைத்தாள், விரைந்து வந்தாள் பாட்டி.

“மொவளுக்கு ஒடம்பு அனலாக் கொதிக்குது, எதயோப் பார்த்துப் பயந்துட்டாப் போல… அழகம்மை…”
“நாடாச்சியம்மா… ஒரு வாரம… புள்ள மூஞ்சி… வாடிப் போயிக் கிடக்கு ஏண்ணு புரியல… நீங்க…

கவனிச்சியளா… புள்ளிமானாட்டும் துள்ளித் துள்ளி திரிவாக… , ம்மா… . நா… சுக்கு, மிளகு போட்டு தண்ணி காச்சி எடுத்துட்டு வரட்டுமா… ”

“இல்ல… அழகம்மை… அத நான் பாத்துக்கரன் நீ போயி… முதலப் பண்ணைய்யாகிட்ட வெசயத்தச் சொல்லிட்டு, வைத்தியரை உடனே வரச் சொல்லிட்டு வா…”

பாட்டி நிக்கவில்லை விரைவாக நடந்தாள். கோவிலில் பண்ணையார் இல்லை. வேகமாக வைத்தியர் வீடுநோக்கி சென்றாள்.

கையோடு வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்தாள்.

அவர் நாடி பிடித்து பார்த்துவிட்டு அவள் இமைகளைத் திறந்துப் பார்த்தார்.

பலத்த யோசனையோடுச் சொன்னார்.

“நாடாச்சியம்மா… புள்ளக்கி வெசக் காச்சல் வந்திருக்கு. ஒடம்புல கொஞ்சோண்டும் எதுப்பு சக்தி இல்ல… ரொம்பக் கவனமாப் பாத்துக்கோங்க…

நான் குடுக்கும் மருந்தக் குடுங்க… காய்ச்சல் கொறஞ்சிடும், கொறஞ்சா ஒடம்புலத் தெம்பு வந்து எழும்பிடுவாங்க… கொறையாட்டி… ஆளு அனுப்புங்க” சொன்னவர் மருந்தை உள்ளுக்குள் கொடுத்தார். அதை உள் வாங்காமல் அப்படியே வெளியில் வாந்தி எடுத்தாள்.

நாடாச்சியம்மாள் பயத்தோடு மகளைப் பார்த்தாள், அறுத்து போட்டக் கீரைப் போல குழைந்து கிடந்தாள் சொர்ணம்.!!!.

 
 
 
 

This post has been viewed 53 times