ஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி

 

ஒரு வருடத்துக்குப் பிறகு முரசொலி அலுவலகம் சென்றார், கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி , சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்று, முரசொலி கண்காட்சியை பார்வையிட்டார்.

karunanidhi-9

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஓராண்டாக எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்றார். பின்னர், “டிரக்யாஸ்டாமி” சிகிச்சை முடிந்து, கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார்.

மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவந்த கருணாநிதி, தி.மு.க. வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு வெளியே வந்த கருணாநிதி, முதல் முறையாக கார் மூலம் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்திற்கு காரில் சென்றார். காரில் இருந்து இறங்கிய பின்னர் சக்கர நாற்காலியிலேயே சென்று, முரசொலி பவள விழா கண்காட்சியை கருணாநிதி பார்வையிட்டார்.

முரசொலி அலுவலகம் சென்ற கருணாநிதியை, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி,எ.வ.வேலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் சக்கர நாற்காலியில் சென்ற படியே, முரசொலி பவள விழா காட்சி அரங்கை கருணாநிதி சுற்றிப்பார்த்தார். ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி மெழுகு சிலையையும் பார்வையிட்டபின், 30 நிமிட நேரம் அங்கு இருந்தார், பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்கு காரில் புறப்பட்டார். அவரது மகள் செல்வி, கருணாநிதியுடன் காரில் சென்றார்.

கருணாநிதி அங்கிருந்து புறப்பட்டார். கோபாலபுரம் இல்லத்துக்கு காரில் திரும்பிச் சென்ற கருணாநிதியை பார்த்து தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். அவர்களை பார்த்து கருணாநிதி கை அசைத்தார்.

இந்த நிலையில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை அடுத்தடுத்த நாட்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்” என்று அவரது குடும்ப மருத்துவர் கோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் உடல் நலம் தேறி வருவதாகவும், முரசொலி பவளவிழா கண்காட்சி அரங்கின் ஓவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக அவர் பார்வையிட்டதாகவும் கூறினார். விரைவில் கருணாநிதி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும், பேசுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்!!!.

 
 
 
 

This post has been viewed 847 times