தும்பைச்செடியின் மருத்துவப் பயன்கள்

 

தும்பைச்செடியின் மருத்துவப் பயன்கள்

ஒரு சிறிய மொட்டில் ஐந்து இதழ்களை உடைய தும்பைச்செடி, கிராமப்புறங்களில், கை மருந்தாக பயன்படுகிறது. தும்பை செடியின் தண்டு மற்றும் இலைக்குத் தனிவாசனை உண்டு. இந்த தும்பைச் செடியின் அனைத்து பகுதிகளும் மருத்துவ குணம் கொண்டது.

5

தும்பை இலையையும், மிளகையும் அறைத்து குடித்தால், விஷக்கடி போன்றவை நீங்கும். கடி பட்ட இடத்திலும் இதனை பூச, விஷம் இறங்கும். அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து குடித்தால், விக்கல் நீங்கும். தும்பைப் பூவையும், ஆடு தீண்டாப் பாலை விதையையும் அரைத்து, பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.

leucas

தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். காய்ச்சலுக்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

தும்பைச் சாறு 200 மி.லி. வெங்காயச் சாறு 100 மி.லி. பசு நெய் 150 மி லி. ஆமணக்கு எண்ணெய் 150 மி.லி. கலந்து காய்ச்சி வடிகட்டிக் குழந்தைகளுக்குக் கால் கரண்டியளவு கொடுத்து வர மாந்தம், கணை தீரும். இருமல், இளைப்பு மாறும். மலர்ச்சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளிப்படும். உடல் சூடுதணிந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்.

தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்துப் புங்கு நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக் காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தினால், காதில் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் தீரும். தும்பைச் சாற்றைத் தேனில் கலந்து சுட வைத்துக் குழந்தைகளுக்குப் புகட்ட இழுப்பு நீங்கும்.

தும்பை இலைச்சாறு 10 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி. வெங்காயச்சாறு 5 மி.லி. நல்ல எண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப் பெரும்பாடு நீங்கும். தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காய்ச்சி வடிகட்டி, காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் குடித்தால், கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.!!!.

 
 
 
 

This post has been viewed 393 times