தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்: அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?

 

11MA_RADHAKRISHNAN_1051320e1

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சியில் கோஷ்டி பூசல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினை மீது, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக, டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

TH14_TAMILISAI_2106823e

இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார்? என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்க வில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில், மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு,  தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது.

இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட வில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடிய வில்லை என்றும் தெரிய வருகிறது.

இது போன்ற நிலையில்தான் , நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதையும், மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் இரு இடங்களை மட்டுமே பெற்றுள்ள பாஜக, இன்னும் 18 மாதங்களில் நடக்க இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. நடந்து முடிந்த மக்களை தேர்தல் படி, அதிமுக-வுக்கு 44 சதவீத வாக்குவங்கி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக மேலிடம் செயல்பட்டு வருகிறது. இதற்கு, இது போன்ற உள் கட்சி பிரச்சினைகளை முதலில் சீர்படுத்த வேண்டிய நிலையில் தேசிய தலைவர் அமித்ஷா இருக்கிறார் என்பதே  உண்மை.

 
 
 
 

This post has been viewed 318 times